நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்காமல், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களையும் கடமைக்கு திரும்புமாறு உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் இரண்டு மாத வேதனம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை உதய செனவிரத்ன குழுவிற்கு சமர்ப்பித்து, 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் உள்ளடக்குவதாகவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
நாட்டில் உள்ள 17 பல்கலைக்கழகங்கள் மற்றும் 19 ஒன்றிணைந்த பட்டப்படிப்பு நிறுவனங்களின் 14,600 கல்விசாரா ஊழியர்கள் 65 நாட்களாக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் முழு உயர்கல்வித்துறையும் முடங்கியுள்ளது. கல்வியைக் கட்டியெழுப்பி, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதே அனைவரது நோக்கமாக இருக்க வேண்டும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.