யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றம் மற்றும் அதன் வைத்திய பணிகளை உடன் வழமைக்கு கொண்டு வருவதற்கு வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நாளை திங்கட்கிழமை காலை 8 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தென்மராட்சி மக்கள் துண்டுப்பிரசுரம் மூலம் அறிவித்துள்ளனா்.
அத்துடன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும், சதிகளை உடைத்தெறியவும் வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு கொண்டு வர வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கடையடைப்புக்கும் சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மூன்றாவது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் வைத்திய சேவைகளை புறக்கணித்து வரும் நிலையில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா குறித்த வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்திய அத்தியட்சகருடன் வைத்தியசாலை நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது வைத்தியசாலையை மேம்படுத்த தன்னால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளின் போது ஒரு சில வைத்தியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இன்று வைத்தியசாலையை இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமைக்கு கொண்டு சென்றிருப்பதாக வைத்திய அத்தியட்சகா் இராமநாதன் அர்ச்சுனா அமைச்சருக்குத் தொிவித்திருந்தாா்.
அத்துடன், வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் சத்திரசிகிச்சைக் கூடம் ஆகியவற்றை இயங்க வைக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் மற்றும் ஆளணி வளம் காணப்படுவதாகவும் வைத்திய அத்தியட்சகர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.
இந்நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தனர்.
பொதுமக்கள் தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய அக்களவிஜயம் மேற்கொள்ளப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.
இதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விடயத்தில் பல்வேறுபட்ட ஊழல் மோசடிகள் மறைந்திருப்பதால், அவற்றிற்கு எதிராக வைத்திய அத்தியட்சகா் இராமநாதன் அர்ச்சுனா முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து சில தரப்பினா் தமது எதிா்ப்பினை வெளிப்படுத்துவதாக சமூக ஆா்வலா்கள் பலா் கருத்து வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.