ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஜனாதிபதித் தேர்தல் பிற்போடப்படுவதைக் கடுமையாக எதிர்த்துக் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவது அரசியலமைப்புக்கு முரணானது மாத்திரமல்ல, மாறாக அது நாட்டுமக்கள் தவறாக வழிநடத்தி, நாட்டின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைப்பதற்கு வழிகோலும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பில் ஒவ்வொருவரும் மாறுபட்ட தர்க்கத்தை முன்வைத்தாலும், சட்டத்திற்கமைவாகவே உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌஷல்ய நவரத்ன குறிப்பிட்டுள்ளாா்.
இந்நிலையில், ஏற்கனவே மாகாணசபைத் தேர்தல்கள், உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் என்பன நீண்டகாலமாகப் பிற்போடப்பட்டுள்ளன.
எனவே அதன் நீட்சியாக ஜனாதிபதித் தேர்தலையும் பிற்போடாமல், அதனை உரிய காலப்பகுதியில் நடாத்தவேண்டியது அவசியமாகும் எனவும், அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளாா்.
அத்துடன், தா்க்கங்களுக்கு அப்பால், அரசியலமைப்பின் பிரகாரம் இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தவேண்டும் எனவும், மாறாக அதனைப் பிற்போடுவது அரசியலமைப்புக்கு முரணானதாகவே அமையும் என மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணயுமான அம்பிகா சற்குணநாதன் தொிவித்தாா்.