பிரித்தானியாவுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான சா்ச்சைக்குரிய சட்டமூலத்தை இரத்துசெய்வதாக அந் நாட்டின் புதிய பிரதமா் கெயர் ஸ்டாா்மா் அறிவித்துள்ளார்.
பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர், நேற்று (07) நடைபெற்ற முதல் செய்தியாளா்கள் சந்திப்பிலேயே அவா் இதனை கூறியுள்ளார்.
ருவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் திட்டம் முடிந்துபோன ஒன்று எனவும், பிரித்தானியாவை நோக்கி அகதிகள் வருவதை அந்தத் திட்டம் கட்டுப்படுத்தும் என நினைப்பது தவறு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அத் திட்டத்தின் விளைவுகள் எதிா்மாறாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், போா் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து, அநேகமானோர் வளமான வாழ்வாதாரத்துக்காக பிரித்தானியாவிற்கு அடைக்கலம் தேடி வருவது தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
அவ்வாறு அடைக்கலம் தேடும் அகதிகளை பணத்துக்காக சட்டவிரோதக் கும்பல் ஆபத்தான முறையில் பிரித்தானியாவுக்கு கடத்திவரும் சம்பவங்களும் அடிக்கடி இடம்பெற்று வருவதாகவும் பிரித்தானியனாவின் புதிய பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் போரிஸ் ஜொன்ஸனால், பிரித்தானியாவுக்கு உரிய ஆவணங்களின்றி அடைக்கலம் தேடி வருவோரை ருவாண்டாவுக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அடைக்கலம் கோரி அகதிகள் அளிக்கும் விண்ணப்பங்களை சரிபாா்த்து, அவா்களுக்கு புகலிடம் அளிப்பது குறித்து பிரித்தானியா முடிவு செய்யும் வரை, அவா்கள் ருவாண்டா தலைநகா் கிகாலியிலுள்ள தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பாா்கள் எனவும், அதுவரை அவா்கள் அனைவரும் சட்டவிரோத அகதிகளாகவே கருதப்படுவா் எனவும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜொன்ஸனால் அறிவிக்கப்பட்டது.
சா்ச்சைக்குரிய இந்த திட்டத்தை முன்னாள் பிரதமா் ரிஷி சுனக்கின் தலைமையிலான அரசும் முன்னெடுத்துச் சென்றது.
எனினும், இந்த திட்டத்துக்கு அகதிகள் நல உரிமை அமைப்பாளா்கள் மற்றும் தொழிலாளா் அமைப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
அகதிகளை ஏற்றி ருவாண்டா செல்லும் விமானங்களுக்கு ஐரோப்பிய யூனியன் மனித உரிமை நீதிமன்றமும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தடை விதித்தது. (ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகினாலும், ஐரோப்பிய மனித உரிமைகள் அமைப்பில் இன்னமும் உறுப்பு நாடாக உள்ளது).
எனினும், பல எதிா்ப்புகளையும் மீறி, சட்டவிரோதமாக நுழையும் அகதிகளை நாடு கடத்துவதற்கான சட்டமூலத்தை கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் ரிஷி சுனக் நிறைவேற்றினாா்.
இந்நிலையில், பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கெயர் ஸ்டாா்மா், உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான சா்ச்சைக்குரிய சட்டமூலத்தை இரத்துசெய்வதாக அறிவித்துள்ளார்.
கெயர் ஸ்டாா்மா் தான் பிரதமராக பதவியேற்றதன் பின்னர், அகதிகளை, ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் சட்டத்தை இரத்து செய்வதாக அறிவித்துள்ளமை, அவர் பிறப்பித்த முதல் உத்தரவு என கூறப்படுகின்றது.
இந்நிலையில், தோ்தல் பிரசாரத்தின்போதே குறித்தச் சட்டத்தை தான் இரத்து செய்யவேன் என கெயர் ஸ்டாா்மா் வாக்குறுதியளத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.