பிரிட்டனில் நிகழ்ந்திருக்கும் ஆட்சிமாற்றமானது, இனப்படுகொலை மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில், எதிர்வருங்காலங்களில் முன்னேற்றகரமான நிலையை நோக்கி நகருமென எதிா்பாா்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளாா்.
14 வருடங்களுக்குப் பின்னர் பிரிட்டனில் நிகழ்ந்திருக்கும் இந்த ஆட்சிமாற்றம் ஈழத்தமிழர் நலனில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைத் தொிவித்துள்ளாா்.
அத்துடன், ஆங்கிலேயர்கள் இலங்கையிலிருந்து வெளியேறியபோது, தமிழர்களுக்கான நியாயமானதொரு அதிகாரப்பகிர்வை வழங்காததன் காரணமாக இவ்விடயத்தில் அவர்கள் பொறுப்புக்கூறவேண்டிய நிலையில் இருக்கிறார்கள் எனவும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரிலும், அதன் பின்னரும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதை இலக்காகக்கொண்ட செயற்பாடுகளை தொழிற்கட்சியினா் விரைந்து முன்னெடுக்கவேண்டும்’ என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
இதேவேளை, தொழிற்கட்சியைப் போன்றே கொன்சவேட்டிவ் கட்சியும் கடந்த காலங்களில் தமிழர் விவகாரத்தில் முனைப்புடன் செயலாற்றி வந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளாா்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கொண்டுவருவதற்கு முழுமையான ஒத்துழைப்பை கொன்சவேட்டிவ் கட்சியும் வழங்கியதைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன்,
தொழிற்கட்சியின் வெற்றியினால் மாற்றமொன்று நிகழுமெனில் அது தமிழர்களுக்கு சிறந்த மாற்றமாகவே அமையும் எனவும் அவா் நம்பிக்கை வெளியிட்டுள்ளாா்.