தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் இன்று திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அன்னாரின் புகழுடல் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமாகவுள்ளது.
சம்பந்தனின் பூதவுடல் அன்னாரின் திருகோணமலை இல்லத்தில் நேற்றுமுன்தினம் முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பலரும் அன்னாருக்கு உணர்வுபூர்மாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதற்கமைய இன்று நண்பகல் 12 மணிக்கு முன்பாக இறுதி அஞ்சலிகளை திருகோணமலை, தபால் கந்தோர் வீதியிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் செலுத்துமாறும் அதன் பின்னர் சமயச் சடங்குகள் ஆரம்பமாகும் என மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலிக் கூட்டமும் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகி அன்னாரின் பூதவுடல் தகனத்துக்காக மாலை 3 மணிக்கு திருகோணமலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இந்த நிலையில், சம்பந்தனின் இந்த இறுதி நிகழ்வில் இலங்கையின் அரசியல் பிரமுகர்களும், வெளிநாட்டு முக்கிய அரசியல்வாதிகளும் கலந்துக்கொள்ள உள்ளனர்.
அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் அரசியல்வாதிகள், மத குருமார்கள், கல்விச் சமூகத்தினர், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பந்தனின் இறுதிக்கிரியை முன்னிட்டு கிழக்கின் சகல பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடியை பறக்கவிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துமாறு பல்வேறு தரப்பினரால் கோாிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இரா. சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளதுடன், ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு அப்பிரதேசத்தில் பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளா்தொிவித்தாா்.