2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை சான்றுரைப்படுத்தும் நடவடிக்கை எதிர்வரும் சில நாட்களில் நிறைவடையும் என தேர்தலகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான திகதி ஜூலை 17ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க அறிக்கையின் ஊடாக இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் செம்டெம்பர் 17ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 16ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறுகின்றது.
அதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு தயாரான நிலையிலேயே உள்ளது.
அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் வேட்புமனுக்கள் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வர்த்தகரான சமிந்திர தயான் லெனவ என்பவர் உயர் நீதிமன்றத்தில் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்
வர்த்தகரான சமிந்திர தயான் லெனவவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தாக்கல் செய்துள்ள மனு நாளை உயர்நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது