”நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக இரத்து செய்ய வேண்டும்” என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, சட்டவிரோதமாக கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டமை, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அவை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்படும் பட்சத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது.
அதன் காரணமாகவே மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகளை மத்திய, மாநில அரசுகள் நிறுத்தி வைத்துள்ளன.
இத்தகைய சூழலில் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது எந்த வகையில் நியாயம்? மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தனியார் பல்கலைக்கழகங்களின் சார்பில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நீட் தேர்வில் 500 மதிப்பெண்கள் எடுத்தாலும் கூட பணம் இல்லாத மாணவர்களால் தனியார் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் செலுத்தி சேர முடியாது.
அதே நேரத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தாலும் பணம் இருந்தால் மருத்துவப் படிப்பில் சேர முடியும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தான் தனியார் கல்லூரிகளை அணுகும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் இடம் ஒதுக்குகின்றன.
ஆகவே மருத்துவக் கல்வி வணிகமயமாக்குவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வு இனியும் தொடரக்கூடாது. எனவே, நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக இரத்து செய்ய வேண்டும்” இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.