தேர்தலைப் பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்குக் கிடையாது எனவும், ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆகியன குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிச்சயமாக நடைபெறும் என்பதை ஜனாதிபதி தொடர்ச்சியாக வலியுறுத்தியிருந்தார்.
இதன்பிரகாரம் முதலாவதாக ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். தேர்தல் செலவீனங்களுக்காக நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், ஒக்டோபர் மாதம் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்.
தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இருந்து மீட்டெடுக்க ஜனாதிபதி மேற்கொண்ட வேலைத்திட்டங்களை மக்கள் நன்கு அறிவார்கள்.
அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என்பதே நாட்டுமக்களின் எதிர்ப்பார்ப்பாகும்” இவ்வாறு அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.