பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 75 நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்
இந்த நிலையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் தொடர்ச்சியாக கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்
இந்த கலந்துரையாடலில் சாதகமான தீர்வு எட்டப்பட்டதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்
சம்பளத்தில் 15 வீத வெட் வரி அறவிடப்படுவது மற்றும் கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்
இதன்காரணமாக 17 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 உயர்கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் கடந்த 2 மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்தன.
மேலும் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ளக மற்றும் வெளிவாரியாக கல்வி கற்கும் சுமார் 2 இலட்சம் மாணவர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியிருந்ததுடன் கற்றல் நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.