கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் மின்சாரம், நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சுமார் 10 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், தொடர்ச்சியாக தாம் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பெரும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருவதாக அக்கிராம மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
மேலும் மின்சாரம் பெறுவது குறித்து மின்சார சபையினரை நாடியபோது அவர்கள் மின்கம்பத்தினை நடுவதற்கு பணம் அறவிடப்படும் எனக் கூறியதாகவும், குறித்த பணத்தொகையை செலுத்தும் வசதி தம்மிடம் இல்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை யானை, கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல்களுக்கும் தாம் நாளாந்தம் முகம்கொடுத்து வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மாணவர்களின் கல்வியும் பெரும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நீண்ட காலமாக நீடிக்கும் தங்களின் இந்த பிரச்சினைகள் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, இவற்றுக்கு தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.