வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்று மாலை இடம்பெற்றது.
மூன்று தேர்களில் முதலில் வினாயகர் வலம்வர நடுவிலே சிவன் வலம்வர மூன்றாவது தேரில் முருகப்பெருமான் தேரேறி வலம் வந்தார்.
தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு கொண்டதுடன் பறவைக்காவடி, பால்காவடி, அங்கப்பிரதட்டை, அடிஅழித்தல், கற்பூரச்சட்டி, பாற்செம்பு எடுத்தல் போன்ற நிவர்த்திக்கடன்களையும் நிறைவேற்றினர்.
ஈழத்தில் உள்ள சிவ ஆலயங்களில் சிறப்புமிக்கதும் சுயம்பு லிங்கத்தை உடைய பெருமையைக் கொண்டது ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயம்.
ஒட்டுசுட்டானில் வாழ்ந்த பண்டைய விவசாயி ஒருவர் குரக்கன் கதிர்களைக் கொய்த பின்னர் அவ்விடத்தை தீயிட்டு எரித்தார்.
அப்பொழுது கொன்றை மரம் ஒன்றின் கீழ் பகுதி எரியாமல் இருந்ததை கண்ட அவர் அங்கு மண் வெட்டியால் வெட்டும்போது அக்கொன்றை மரத்தின் கீழே சிவலிங்கம் ஒன்று இருப்பதை கண்டார்.
இன்றும் அங்குள்ள சிவலிங்கத்தில் மண்வெட்டியால் வெட்டிய தழும்பு உள்ளது.
இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் பெயர் ஒட்டுசுட்டான் தந்தோன்றியீச்சரர் எரித்த குரக்கன் ஒட்டுவேகவில்லை என்பதனால் வேகாவனமுடையார் என்னும் காரணப் பெயரும் வழங்கப்பட்டு வருகின்றது.
ஆலயத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவி பெயர் பூலோக நாயகி என்பதுடன், இக்கோயிலின் தல விருட்சம் கொன்றை மரமாகும்.
இங்கு மகோற்சவம் ஆனிமாதத்தில் வருகின்ற அமாவாசையோடு ஆரம்பித்து பதினாறு நாட்களுக்கு நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.