இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லைக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போதே, இராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் இவர்களை கைது செய்ததோடு, இரண்டு விசை படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டதை அடுத்து காங்கேசன்துறை கடற்கரை முகாமுக்கு குறித்த மீனவர்கள் அழைத்து வரப்பட்டு, முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சூறைக்காற்று காரணமாக 5 நாட்களுக்கு பின்னர் மீன் பிடிக்க சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே நேற்று நள்ளிரவு இராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.