உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து சுற்றுலா, காணி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் தங்களது அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் இன்று கொழும்பில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பானது தங்களுக்கு சாதகமான ஒன்றாகும் என்றும் தாங்கள் அரசாங்கத்துடன் இணைந்தமைக்கான நோக்கம் வெற்றி பெற்றுள்ளதாகவும் அறிவித்தனர்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளதாவது” நாட்டுக்காக தீர்க்கமான முடிவுகளை எடுக்கும்போது, இந்த நடவடிக்கையை எத்தனை மாதங்களுக்கு தொடர முடியும் என்றுதான் நான் மனுஷவுடன் அன்று கலந்தாலோசித்திருந்தேன்.
ஆனால், நாம் இரண்டு வருடங்கள் நாட்டுக்காக சேவையாற்றியுள்ளோம்.
இதனையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இது ஐக்கிய மக்கள் சக்திக்கு உண்மையில் வெற்றிக் கிடையாது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஜனாதிபதித் தேர்தலில் வேலை செய்வதற்காக அவர்கள் எம்மை விடுவித்துள்ளார்கள் என்றே கூறவேண்டும். சஜித் பிரேமதாஸ அன்று சவாலை ஏற்றுக் கொள்ளவில்லை.
அவர் அன்று அரசாங்கத்தைப் பொறுப்பேற்றிருந்தால் இரண்டு வருடங்களில் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டிருக்கும். அப்போது மக்கள் வேறு ஒருவரைத்தான் ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள் என்று கருதியே அவர் அரசாங்கத்தை அன்று பொறுப்பேற்கவில்லை.
அவர் அப்போதுள்ள மக்களின் நிலைமையை கவனத்தில் கொள்ளவில்லை.
எனினும், நாம் அப்போது பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்காக தான் இந்தப் பொறுப்பை ஏற்றோம். சிலர் இது தற்கொலைக்கு சமமான செயல் என்று விமர்சித்தார்கள்.
எமக்கு தோல்வியேற்பட்டாலும் நாட்டுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நோக்கத்தில்தான் நாம் செயற்பட்டோம்.
அந்தவகையில், எமது திட்டம் வெற்றியடைந்துள்ளது. இன்று சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஐ.எம்.எப். இடமிருந்து கிடைக்கும் நிதியை விட மூன்று மடங்கு நிதி இந்த இரண்டு வருடங்களில் கிடைத்துள்ளது.
மனுஷ நாணயக்கார இதைவிட அதிக நிதியை கொண்டுவந்துள்ளார். எனக்கும் மனுஷவுக்கும் இந்தத் தீர்வினால் கவலைக் கிடையாது. நாம் சரியான செயற்பாட்டை செய்துவிட்டுதான் வெளியேறுகிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளதாவது”
நாம் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தபோது பலர் விமர்சித்தார்கள். இந்த நாட்டை ஒருபோதும் பொருளாதார ரீதியாக முன்னேற்ற முடியாது என்று கூறினார்கள். இப்படியான காலத்தில் இந்த சவாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டிருந்தார்.
இந்த சவாலுக்கு நாமும் அஞ்சியவர்கள் இல்லை என்பதால்தான் அவருக்கு ஆதரவாக அரசாங்கத்தில் இணைந்தோம். நாம் அமைச்சுப் பதவியை ஏற்று இந்த 2 வருடங்களில் 12 பில்லியன் டொலரை நாட்டுக்கு கொண்டுவந்துள்ளோம்.
இந்த நிதி ஊடாகத் தான் எரிபொருள், எரிவாயுவை நாட்டுக்கு பெற முடிந்தது. மின்சாரத்தை தடையின்றி வழங்க முடிந்தது. தேவையான மருந்துகளை கொள்வனவு செய்ய முடிந்தது.
ஏற்றுமதி வர்த்தகம் ஸ்தீரமடைந்தது.
இதனால் இன்று நாட்டின் பொருளாதாரமும் இன்று முன்னேறியுள்ளது. நாட்டுக்கு செய்ய வேண்டிய எமது கடமைகளை சரியாக நிறைவேற்றிதான், இன்று வெளியேறுகிறோம்.
எனவே, இதனையிட்டு கவலையடையவோ அஞ்சவோ போவதில்லை.
நாம் கட்சியை விட்டு வெளியேறும்போது கூட கட்சியின் யாப்பு தொடர்பாக நாம் நன்றாக அறிந்திருந்தோம். அவர்களால் எம்மை கட்சியிலிருந்து நீக்க முடியும் என்பதையும் அறிந்திருந்தோம். எனினும், நாம் இவற்றுக்கு அஞ்சவில்லை. நாட்டு மக்களுக்காக தான் நாம் வெளியேறினோம்.
நாம் வெளியேறிய காரியமும் இன்று வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியுடன் இன்று வெளியேறுகிறோம்” இவ்வாறு மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.