2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச சேவையின் அடிப்படைச் சம்பளம் கனிஷ்ட தரத்தினருக்கு 24% இலிருந்து 50% வரை அதிகரிக்கப்படும் என சம்பள முரண்பாடுகள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே சம்பள முரண்பாடுகள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், நிலவும் பணவீக்கம் மற்றும் பொருளாதார காரணிகளைக் கருத்திற் கொண்டு 2025 ஜனவரி முதல் மூன்று வருடங்களுக்கு நிலையாக ரூ.25,000 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்க சம்பள முரண்பாடுகள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழு முன்மொழிந்துள்ளது.
இந்த முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை மற்றும் திறைசேரியின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், புதிய திருத்தத்தின் மூலம் அரச சேவையில் உள்ள மிகக் குறைந்த ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.30,000 ஆகவும் வாழ்வாதார கொடுப்பனவுடன் கூடிய மொத்த சம்பளம் ரூ.55,000 ஆகவும் அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.
அத்துடன் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரச சேவை தொழில்சங்க நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு சம்பள முரண்பாடுகளைத் தீர்க்கவே இந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதாகவும் உதய ஆர் செனவிரத்ன சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அரச ஊழியர்களுக்கான திருப்திகரமான பணிச்சூழலை உருவாக்கும் சிபாரிசுகளையும் பொதுமக்களுக்கு சிறந்த சேவை மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் உந்து சக்தியாக மாற்றுவதற்கான விரிவான வேலைத் திட்டத்தையும் ஜனாதிபதி சம்பள முரண்பாடுகள் தொடர்பான விசேட குழு முன்வைத்துள்ளது.
மேலும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, 2025 ஜனவரி முதல், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு தலா ரூ.12,500 வழங்குவதற்கும், 2020ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படாத ஊதிய உயர்வை வழங்கவும், அதற்கேற்ப அவர்களின் ஓய்வூதியத்தை திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.