எதிர்வரும் 10 வருடங்களில் நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணியை உருவாக்காவிடின் மீண்டும்
நெருக்கடியான நிலை ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெல்மடுல்ல வாராந்த சந்தை வளாகத்தில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
”நாட்டில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு சிறந்த கல்வி, சுகாதாரம் வசதிகளை வழங்க சிறந்த திட்டதை வகுத்துள்ளோம்.
தனிநபர் வருவாயை அதிகரிக்கவும் புரட்சிகரமான திட்டங்கள் முன்னெடுக்க இருக்கிறோம். குறிப்பாக நாட்டில் பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்.
முதன் முறையாக பெண்களை வலுப்படுத்தும் சட்டத்தை நாம் நிறைவேற்றியுள்ளோம். சகல பொலிஸ் நிலையங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக முறையிட பிரிவு ஆரம்பிக்கப்படும்.
வேறு எந்த கட்சியாவது பெண்களுக்காக இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதா? சமூக நியாய ஆணைக்குழு ஒன்றை உருவாக்க இருக்கிறோம்.
அரசியல் முறைமையையும் மாற்ற இருக்கிறோம். ஏனைய கட்சிகள் மோசடி பற்றி பேசினாலும் உலகில் தலைசிறந்த மோசடி தடுப்புச் சட்டத்தை நாம் தற்போது நிறைவேற்றியுள்ளோம்.
மேலும் சில சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். திருடர்களைப் பிடிப்பதற்கான சட்டங்களை நாம் பலப்படுத்த வேண்டும். அரசியல்வாதிகளால் திருடனைப் பிடிக்க முடியாது.
அது பொலிஸாரினதும் நீதிமன்றங்களினதும் முக்கிய பணியாகும். மக்கள் சபைகளை உருவாக்கவும் தேர்தல் முறையை மாற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மாற்றம் வேண்டும் என்று கோரி மக்கள் வீதியில் இறங்கினார்கள். அந்த மாற்றத்தை நாம் மேற்கொண்டு வருகிறோம்.
முகங்களைப் பாராது கொள்கைக்காகவே மக்கள் வாக்களிக்க வேண்டும்.
சஜித்தினால் வெல்ல முடியாது. சஜித்திற்கு வாக்களித்து அநுரவை பலப்படுத்தாதீர்கள். செப்டம்பர் 21 ஆம் திகதி சிலிண்டருக்கு வாக்களியுங்கள். தவறினால் எாிவாயுவும் இல்லை. எதிர்பார்க்கும் மாற்றமும் நடக்காது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தொிவித்தாா்.