வரிசைகளற்ற மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை தியத உயன வெளிப்புற அரங்க மண்டபத்தில் நேற்று Open Mic Night இளைஞர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக எதிர்பாராதவிதமாக அந்த இடத்திற்குச் சென்ற ஜனாதிபதியை இளைஞர்கள் அன்புடன் வரவேற்றனர். இளைஞர்கள் மத்தியில் அமர்ந்து அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, அவர்களின் கேள்விகளுக்கும் சாதகமான பதில்களை வழங்கினார்.
நீங்கள் அரசாங்கத்திடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று அங்கிருந்த இளைஞர் ஒருவரிடம் ஜனாதிபதி கேட்டதற்கு அந்த இளைஞன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றார்.
அத்துடன் நாட்டின் இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருக்க நல்ல அரசாங்கம் அவசியம் என தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் இளைஞர்களுக்கு நல்லதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை தாம் எடுத்துக் கொள்வதாகவும் வலியுறுத்தினார்.
மீண்டும் வரிசையில் நிற்க முடியாது என இளைஞன் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த ஜனாதிபதி, தனது ஆட்சியில் இந்த நாட்டின் இளைஞர்கள் சினிமா வரிசையில் மாத்திரமே நிற்க வேண்டி ஏற்படும் என்றார்.
மேலும், இளைஞன் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, தனது கடந்த கால அனுபவத்தை நினைவு கூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சராக தாம் வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்த போது, ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, தன்னை அழைத்து வெள்ளை அறிக்கை நல்லது தான் என்றும் ஆனால் மறுசீரமைப்புகளை முன்னெடுக்கச் சென்று அரசாங்கத்திற்கு ஆபத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று எச்சரித்தார் என்றும் குறிப்பிட்டார்.
அந்த மறுசீரமைப்புகளை செய்து தொழிலை இழக்க வேண்டாம் என்று ஜே.ஆர் ஜயவர்தன ஜனாதிபதி தமக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த அறிவுறுத்தல்களுக்கு அமைய தான் இதுவரை செயற்பட்டதாகவும், ஆனால் இம்முறை நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் அவற்றுக்கு முரணாக நடக்க நேரிட்டதாகவும் கூறினார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாம் நாட்டைப் பொறுப்பேற்ற போது பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்திருந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கடன் சுமையுடன் தொடர்ந்தும் சென்றால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
அதன் பிரகாரம், உள்நாட்டு வங்கிகள் ஊடாக கடன் பெற வேண்டாம் என்றும் பணத்தை அச்சிட வேண்டாம் எனவும் சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியதாகவும், அந்த நிலையை கருத்திற்கொண்டு அரச வருமானத்தை ஈட்டுவதற்கு VAT வரியை அதிகரிக்க வேண்டியேற்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாவிட்டால் நாட்டை தற்போதைய நிலைக்கு கொண்டு வர முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த இடத்திற்கு எதிர்பாராத விதமாக வருகை தந்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த இளைஞர்கள், தமது தேவைகள், எதிர்பார்ப்புகள் குறித்து ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாட முடிந்தமை தொடர்பில் தமது மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.