”இயலும் சிறிலங்கா எனும் திட்டத்தின் மூலம் நாட்டை முன்னேற்றுவேன்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தலைமையில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில், கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இன்று இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உணவு, டீசல், மருந்து இல்லாமல் நாடு முழுமையாக வீழ்ச்சி அடைந்திருந்தது. விசாயத்துக்கு உரமும் இல்லை. அந்த சந்தர்ப்பத்தில் நாட்டை நான் பொறுப்பெடுத்தேன். உணவு, மருந்து இல்லாமல் மக்கள் துன்பப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். அதிலிருந்து மீட்க முன்வந்தேன்.
நாட்டை மீட்டேன்அனுர, சஜித் யாரும் நாட்டை மீட்க முன்வரவில்லை. மக்களை பட்டினியில் இருக்கவிட்டார்கள். உணவு, உரம், எரிபொருள், வர்த்தத்தை முன்னெடுக்க நான் முன் வந்தேன்.
பாடசாலைகளை திறந்து பிள்ளைகளின் கல்வியை தொடர நடவடிக்கை எடுத்தேன்.மக்கள் துன்பப்படும் போது அதிலிருந்து மீட்பதற்கு யாரும் முன்வரவில்லை. எனது முயற்சிகளுக்கு ஒத்துழைக்க முன்வருமாறும், அரசாங்கத்துடன் இணையுமாறும் நான் கேட்டேன்.
அவர்கள் முன்வரவில்லை.அவர்கள் தேர்தல்தான் வேண்டும் என்று கேட்டார்கள். தேர்தல் நடத்துவதற்கு பணம் செலவாகும். அரசுடன் இணைந்து பணியாற்ற வருமாறு அழைத்தேன். அவர்கள் வரவில்லை.ஆனால், வேலை நிறுத்தம், தொழிற்சங்க நடவடிக்கைகளை மாத்திரமே முன்னெடுத்தனர். அதனால் எதுவும் நடக்கவில்லை.
உரம், எரிவாயு உணவு என அனைத்தும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் செய்தேன். மண்ணெண்ணை கிடைக்கச் செய்தேன். கடலுக்குச் சென்று மீன்பிடிக்க உதவினேன். ரூபாவின்பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தது. டொலரின் பெறுமதி அதிகமாக இருந்த நிலையில் அதனை குறைத்தேன்.
அதனால், பொருட்களின் விலை படிப்படியாக குறைந்தது.நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய தொடங்கியது. வாழ்க்கை செலவு அதிகமாக உள்ளது. அதனை இலகுபடுத்த பல திட்டங்களை வைத்துள்ளேன். அதனை முன்னெடுத்து நெருக்கடிக்கு தீர்வு காண்பதே எனது அடுத்த 5 ஆண்டுத் திட்டம்.
ஆனாலும், இப்போது சுமுகமாக வாழ முடிகிறது. இந்த நாட்களுக்குள் IMF மற்றும் 18 நாடுகள் உதவின. மேலும் கடன்கள் வழங்கி இன்னும் உதவிகளை செய்ய அந்த நாடுகள் முன்வந்துள்ளன.
5 வருடத்தில் இந்த வேலை திட்டத்தினை நான் முன்னெடுப்பேன். இயலும் சிறிலங்கா எனும் திட்டத்தால் நாட்டை முன்னேற்றுவேன். வாழ்க்கை சுமையை இலகுபடுத்தல், தொழில் வாய்ப்பு, வரிச்சுமையை இலகுபடுத்துவது உள்ளிட்ட திட்டங்களே அடுத்த 5 வருடங்களில் முன்னெடுக்கப்படும்.
வீழ்ந்திருந்த நாட்டின் வருமானத்தை எட்டுவதற்கு வரி அதிகரிக்கப்பட வேண்டி ஏற்பட்டது. ரூபாவின் பெறுமதி அதிகரித்தது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் எமது பணம் இழக்கின்றது. நாம் எமது உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.