”தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாட்டில் இன, மத, கருத்துச் சுதந்திரம் பேணப்படும்” என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
மாத்தளை நகரில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வெற்றிப்பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேர்தல் தோல்விக்கு அஞ்சுபவர்கள் இன்று பிரசார மேடைகளில் மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்திவருகின்றனர்.
எனது வெற்றி, நாட்டு மக்களின் வெற்றியாகும். தேசிய மக்கள் சக்தியினால் நூற்றுக்கு 3 வீத வாக்குகளை மாத்திரமே பெறமுடியும் என எதிர்த் தரப்பு வேட்பாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால் தற்போது அவ்வாறு அவர்கள் கூறுவதில்லை. தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றால் அசம்பாவிதங்கள் இடம்பெறும் என கூறிவருகின்றனர். அதாவது தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் என்பதை எதிர்த்தரப்பு வேட்பாளர்கள் நன்கு அறிவார்கள் அதனாலேயே சமூகத்தில் போலி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
நாம் எதிர்வரும் 22 ஆம் திகதி நிச்சயமாக வெற்றிபெறுவோம். போலி விமர்சனங்களை கண்டு நாம் அச்சமடைய போவதில்லை. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில மத்திய வங்கி கொள்ளையர்கள் பயப்பட வேண்டும்.
கலாசார நிதியத்தில் நிதிமோசடியில் ஈடுபட்டவர்கள் பயப்பட வேண்டும். வீடமைப்பு நிதியத்தில் கொள்ளையடித்தவர்கள் பயப்பட வேண்டும். அதனைவிடுத்து இந்த நாட்டின் அப்பாவி பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை.
நாட்டில் ஒற்றுமையும் சமாதானமும் நிறைந்த யுகம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் உருவாக்கப்படும். தேர்தலில் நாம் வெற்றிபெற்று இந்த நாட்டில் ஊழல் மோசடிகளை முற்றாக ஒழிப்போம்.
அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ளமாட்டோம்.நாட்டில் நடைமுறையில் உள்ள ஊழல்அரசியல் கலாசாரத்தினை நாம் முற்றாக மாற்றுவோம். ஏனைய கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே தேர்தல் வெற்றியையும் நாம் கொண்டாடுவோம்.
ஏனைய கட்சிகளுக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ள மக்களிடம் நாம் ஒருகோரிக்கையினை முன்வைக்கின்றோம்.
ஜனநாயகஉரிமைப்படி வாக்களிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது ஆனால் நாட்டில் புதிதொரு மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமாயின் தேசிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
எமது ஆட்சியில் நாம் யாரையும் கைவிட மாட்டோம் மக்கள் யுகம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஏற்படுத்தப்படும்.
யாழில் நான் தெரிவித்த கருத்தினை இனவாத செயற்பாடாக ரணில்விக்ரமசிங்க திரிபுபடுத்தினார். ஆனால் அதற்கு சுமந்திரன் தகுந்த பதிலடி வழங்கினார். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாட்டில் இன மத சுதந்திரம் பேணப்படுவதுடன் கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளிப்போம்” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.