இலங்கை தமிழரசுக் கட்சியின் விசேட கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெற்றபோதும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற, உத்தியோகபூர்மான தீர்மானம் எட்டப்படாத நிலையில் கூட்டம் நிறைவடைந்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி மூன்று விதமான நிலைப்பாட்டினை வெளியிட்டுள்ள நிலையில் கட்சியாக ஒருமித்து தீர்மானம் எடுப்பதில் குழப்நிலை காணப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது.
சுமந்திரன் தலைமையிலான அணியினர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளபோதும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ள சி.சிறிதரன் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு என நேற்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இன்று வவுனியாவில் கட்சியின் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்தது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்தியர், ப.சத்தியலிங்கத்தின் வவுனியா இல்லத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றிருந்தது.
சுமார் மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்றிருந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன் மற்றும் வடமகாண சபை அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சரவணபவன் இன்றைய தினம் கலந்துகொள்ள முடியாமையினால் ஆறு பேர் கொண்ட குழுவில் 5 பேர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.