எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் இலங்கை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (17) நடைபெறவுள்ளது.
இன்று (18) காலை தேர்தல்கள் ஆணைக்குழு வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கும் சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பாகவும் இது அமைந்துள்ளது.
சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு (ANFREL) மற்றும் காமன்வெல்த் கண்காணிப்பாளர்கள் குழு (COG) ஆகியவை கலந்துரையாடலில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை முதல் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை சந்திக்கின்றனர்.
இதேவேளை, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (PAFFREL) ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் இறுதி வாரத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது.
பரப்பப்படும் சில தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் குறித்து பொதுமக்கள் எந்தவிதமான அச்சமும் கொள்ள வேண்டாம் என்று பெப்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கேட்டுக்கொண்டார்.