இறுதி பிரச்சாரக் கூட்டங்கள் காரணமாக கொழும்புக்கான விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று இன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது
அதன்படி சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கஸ் சந்தியில் இன்று பிற்பகல் 2 மணிக்க இடம்பெறவுள்ளது.
கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ் வீதி,ஜோகஸ் வீதி, லெயார்டிஸ் போட்வே வீதி, கிரான்ட்பாஸ் வீதி, பராக்கிரம வீதி மற்றும் கொஸ்கஸ் சந்தி ஆகிய பகுதிகளின் பொது போக்குவரத்தில் நெரிசல் நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அவிசாவலை வீதி ஊடாக கொழும்புக்குள் உள்நுழையும் வாகனங்கள் கிரான்ட்பாஸ் வீதியை பயன்படுத்தாமல் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை வீதி டவர் மண்டபத்துக்கு முன்பாக இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன்,
குறித்த வீதி பகுதிகளில் பொது போக்குவரத்து நடவடிக்கைளில் நெரிசல் ஏற்படும் என்பதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொட ஆனந்த சமரகோன் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதனால் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேன்லி திலகரத்ன மாவத்தை, நாவல வீதி, பாகொட வீதி, ஆகிய பகுதிகளின் பொது போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமவீர சந்திரசிறி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன்,
மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதால் பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும், மாற்று வீதிகளை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ் திணைக்களம் பொது மக்களிடம் வலியுறுத்தியுள்ளது.