”துணை முதலமைச்சர் குறித்து முடிவெடுக்கும் உரிமை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மாத்திரமே உண்டு” என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று காஞ்சிபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” துணை முதலமைச்சர் பதவி குறித்து எந்த முடிவாக இருந்தாலும் முதலமைச்சர்தான் முடிவெடுப்பார்.
என்னை துணை முதல்வராக்க வேண்டும் என தொண்டர்கள் சொல்வது அவர்களின் விருப்பம். தொண்டர்களின் விருப்பத்தை நேற்று தெரிவிக்கும் வகையில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசியிருந்தார். எல்லா அமைச்சர்களுமே முதல்வருக்கு துணையாகதான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் பெரியாரை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.