நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முறைகேடுகள் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் விசேட கண்காணிப்புப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்புக்குழுக்கள் கடந்த ஒரு மாதகாலமாக தேர்தல் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் வலுவான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் தேர்தல் தினமான நாளையும், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நாளை மறுதினமும் தமது குழுவினரை விசேட மனித உரிமைகள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.