உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வருவதாக புதிய ஜனாதிபதி அநுரகுமார தன்னிடம் உறுதியளித்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை ஆண்டகையை நேற்று நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
கொழும்பு பொரளையில் அமைந்துள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள, அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை ஆண்டகை தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடா்பாக கருத்துத் தொிவித்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,
”இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள
அனுரகுமார திஸாநாயக்கவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேவையான விடயங்களை கொண்டுவருவதற்கான, முக்கிய பணியை இலங்கை மக்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளதாகவே நான் கருதுகின்றேன்.
இலங்கையில் இது ஒரு கடினமான பணியாக இருக்கலாம். ஆனால் நாங்கள் எங்களின் முழு ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் உறுதியாக வழங்குகின்றோம்.
எப்போதும் ஏழை மக்களைப் பற்றி சிந்தித்து உங்கள் பணியைத் தொடருமாறு நான் புதிய ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறேன்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவும் உண்மையை வெளியே கொண்டுவரத் தேவையான அடித்தளத்தைத் தயார் செய்வதாக புதிய ஜனாதிபதி எனக்கு உறுதியளித்துள்ளார்” என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் தொிவித்தாா்.