உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பில் 2019-ம் ஆண்டில் இருந்து பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக லட்டு தயாரிக்கும் எந்திரங்கள் வாங்கி அதன் மூலம் ஆயிரக்கணக்கான லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர வடை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பிரசாதமாக தயார் செய்து விற்கப்பட்டும் வருகிறது.
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் குறித்தும் கேள்வி எழுந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் அழகர்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பிரசாதம் தயாரிக்கும் உணவுக்கூடத்தை நேரடியாக ஆய்வு செய்தார். அதன்பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள், அழகர்கோவில் நெய் தோசை ஆகியவற்றை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராமபாண்டியன் கூறுகையில், “மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் குறித்து பலமுறை ஆய்வு செய்துள்ளோம். லட்டு உள்பட அனைத்தும், சுத்தமாகவும், தரமாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது” என்று கூறினார்