தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான வசந்த சமரசிங்க, பிரதிசபாநாயகரான அஜித் ராஜபக்ஷவின் சகோதரரின் பெயரில் பார் லைசன்ஸ் உள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
கடந்த கால ஆட்சியாளர்கள் சட்டவிரோதமாக இவ்வாறான பார் லைசன்களை வைத்துள்ளதாகவும் இவர்களின் பெயர் விபரங்களை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து பிரதிசபாநாயகர் அஜித் ராஜபக்ஷ கருத்துத் தெரிவித்துள்ளதாவது” வசந்த சமரசிங்க, என்னை தனிப்பட்ட ரீதியாக இலக்குவைத்து சேறு பூசும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.
நான் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பின்னால் செல்பவன் கிடையாது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாடாளுமன்றத்தில் நான் எப்படி செயற்படுவேன், எனது பின்னணி என்ன என்று நன்றாகத் தெரியும்.
இதனை தெரியாத வசந்த சமரசிங்க போன்றோர், ஏனைய அரசியல்வாதிகளுக்கு செய்வதுபோல, என் மீதும் சேறு பூச முற்படுகிறார்கள். கதிர்காமத்தில் பார் ஒன்று உள்ளதாக அவர் கூறியுள்ளார். முடிந்தால் இதனை நிரூபித்துக் காட்டுங்கள்.
எனக்கும் இந்த பாருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. எனது சகோதரரின் பெயரில் பார் இருப்பதாக அவர் கூறுகிறார். அப்படி அது நிரூபிக்கப்பட்டால் நான் எந்தவொரு தண்டனைக்கும் முகம் கொடுக்க தயாராகவே உள்ளேன்.
எனவே, பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இன்னமும் எதிர்க்கட்சி அரசியலை செய்ய வேண்டாம் என நான் இவரிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இதுதொடர்பாக நான் சட்டநடவடிக்கையும் எடுக்கவுள்ளேன்” இவ்வாறு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.