தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசாங்கம் அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதாகத் தெரிவித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் நாட்டின் மீனவ அமைப்புக்களுக்கும் குறித்த கட்சி சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும், தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் மீனவர்கள், தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கை கடற்படையினரின் இந்த செயற்பாட்டுக்கு எதிராகவே எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள குறித்த கட்சியானது, வங்க கடலில் மீன்பிடிக்க செல்லக்கூடிய தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருவதாலும் அவர்களுடைய உடைமைகளை சேதப்படுத்துவது மற்றும் கைது செய்து சித்ரவதை செய்வது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீன்பிடிக்கும் உரிமையை மதிக்க வேண்டும் எனவும் ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களை இலங்கை கடற்பட்டையினர் மதிக்காமல் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையிலுமே இந்த முற்றுகை போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பா.ம.க.தெரிவித்துள்ளது.