மேலைத்தேய – ஐரோப்பிய தமிழ் வானொலிக் கலாசாரத்திலும், பிரித்தானிய தமிழ் வானொலிக் கலாசாரத்திலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ள லைக்காவின் ஆதவன் வானொலி, இன்று தனது 8வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுகிறது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை நோக்காகக்கொண்டு பல தமிழ் வானொலிகள் பிரித்தானியாவில் உதயமானாலும் எந்த ஒரு தமிழ் வானொலியும் தமது துறையில் நின்று நிலைக்க முடியவில்லை.
போதிய அளவு பொருளாதார ஸ்திரத்தன்மைமையை அவர்களால் அடையமுடியாதமையே அதற்கு பிரதான காரணமாகும். அதனால் பல வானொலிகள் வந்த வேகத்திலேயே திருப்பி சென்றுவிட்டன.
இந்த நிலையில், உலகின் முன்னணி வியாபார குழுமமான லைக்கா குழுமத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ஆதவன் வானொலி, சிறந்த திட்டமிடலுடன் நேர்த்தியான வழிகாட்டலோடு செயல்பட்டு, வானொலி ஆரம்பிக்கப்பட்ட குறிகிய காலத்திலேயே அதிக இலாபம் ஈட்டி பொருளாதார ரீதியாகவும் தனது நிலையினை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளது.
அதுவரைக்கும் தமிழ் வானொலிகள் நிலைத்து நிற்க முடியாது என்று இருந்த கருத்தையும் ஆதவன் வானொலி உடைத்தெறிந்து சாதனையை நிலைநாட்டியுள்ளது.
ஆரம்பத்தில் ஒரு இணைய வானொலியாக ஆரம்பித்த ஆதவன் வானொலி, பின்னர் தனது ஒலிபரப்பு சேவையினை லண்டனில் DAB எனும் தொழிநுட்பத்துக்கு மாற்றியது.
இதனால் கணனியில் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த ஆதவன் வானொலியை கணணியினை தாண்டி சகல வழிகளிலும் மக்களால் லண்டனில் எங்கிருந்தாலும் கேட்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
ஏனைய வானொலிகளை விட ஆதவன் வானொலி தனித்து நிற்க இன்னுமொரு சிறப்பம்சமும் உண்டு. அது நிகழ்ச்சிகளின் தரம்.
அதுவரைக்கும் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகளுக்கு இணைய வானொலிகள் இருந்தாலும் அவை அரசியல் சார்ந்தே இருந்தன.
ஆனால் ஆதவன் வானொலி தரமான, ஆக்கபூர்வமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தகவல்கள், விரைவானதும் உண்மையானதுமான செய்திகள், அரசியல் கருத்தாடல்கள், சமகால நடப்புகள் குறித்த விவாதங்கள், அனைத்து வயதினரையும் ஆட்கொள்ளும் பாடல்களும், நிகழ்ச்சிப் படைப்புகளும் என நேயர்களின் ரசனைக்கு ஏற்ப விருந்தளிக்கும் நவீன வானொலிக் கலாசாரத்தை உருவாக்கியிருக்கிறது.
பிரித்தானியாவில் DAB அலைவரிசையில் கடந்த 7 வருடமாக வெற்றிகரமாக பயணிக்கும் ஆதவன் வானொலி, தனது அடுத்தகட்ட நகர்வாக இந்த வருட தைப்பொங்கல் தினத்தில் இலங்கையிலும் தலைநகர் கொழும்பில் 95.3 FM அலைவரிசையில் தனது ஒலிபரப்பை ஆரம்பித்தது.
அதுவரைக்கும் பிரித்தானியாவை கேந்திரமாக கொண்டு இயங்கிவந்த ஆதவன் வானொலி பிரித்தானியாவைத் தொடர்ந்து ஜரோப்பா மற்றும் இலங்கையில் பிரத்தியேக ஒலிபரப்பினை ஆரம்பித்தது.
ஆதவனின் இணையத்தளம் நேயர்களின் Time Zone மற்றும் நாடு என்பவற்றை தெரிந்துகொண்டு அவர்களுக்கு பொருத்தமான செய்திகள், தகவல்கள் மற்றும் விளம்பரங்களை பிரத்தியேகமாக வழங்க ஆரம்பித்தது.
தமிழ் வானொலி வரலாற்றில் நாடுகள் மற்றும் Time Zone இற்கு ஏற்றவாறு பிரத்தியேக ஒலிபரப்பினை வழங்கும் தொழில்நுட்பத்தை முதன்முதலாக அறிமுகம் செய்துவைத்த பெருமை ஆதவன் வானொலியையே சாரும்.
ஆதவன் வானொலியில் அடுத்த கட்ட நகர்வாக இப்போது கனடா நாட்டுக்குமான பிரத்தியேக ஒலிபரப்பு ஆரம்பமாகவுள்ளது.
புலம்பெயர் தமிழ்ச் சூழலில் தமிழ் ஊடகப் பரப்பு பாரிய சவால்களுக்கு உட்பட்டு வரும் சூழலில், அந்த சவால்களையும், இக்கட்டுகளையும் தகர்த்தெறிந்து, ஆதவன் வானொலி உள்ளிட்ட ஆதவன் ஊடக வலையமைப்பை வெற்றிப் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்வதில் லைக்கா குழுமத்தின் நிறுவனர், தலைவர் – அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் வழங்கும் தலைமைத்துவத்திற்கும், ஆதரவுக்கும் நிகர் ஏதும் இல்லை.
ஆதவன் வானொலியானது, இன்னும் பல உச்சங்களை தொட்டு மக்களின் வானொலியாக நின்று தனது சேவையினை மக்களுக்காக வழங்கும் எந்தவித ஐயமும் இல்லை.