2023 -2024 நிதியாண்டுக்கான வரி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு சென்று வரி அறவிடும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1417 பில்லியன் ரூபா வரி அறவிடப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த தொகையானது 2024 ஆம் ஆண்டுக்கான வருமான இலக்கின் 70 வீதமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வரிசெலுத்தவேண்டியவர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் இன்று முதல் குறித்த தரப்பினர்களின் இடங்களுக்கு சென்று வரி அறவிடப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய செலுத்தப்படாத வரியினை சட்டவிதிமுறைகளுக்கேற்ப அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும்குறிப்பிட்டுள்ளார்.
2023 -2024 நிதியாண்டுக்கான அனைத்து வருமான வரி நிலுவையினையும் செலுத்துவதற்கு இன்று வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் எவரேனும் ஒருவர் வரி செலுத்த தவறுவாராயின் அல்லது தாமதமாக செலுத்தப்படுகின்ற வருமான வரிக்கு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை அல்லது மேலதிக வட்டி அறவிடப்படும் எனவும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த விடயம் தொடர்பாக 1944 என்று துரித எண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.