சென்னையில் நேற்று (06) நடைபெற்ற இந்திய விமானப்படையின் (IAF) விமான கண்காட்சியின் போது 5 பார்வையாளர்கள் இறந்ததுடன் 200 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து தமிழக அரசு எதிர்க்கட்சிகளின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்திய விமானப் படையின் 92 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலட்சக்கணக்கான மக்கள் நெரிசல், அடிப்படை வசதிகள் மற்றும் கடுமையான வெப்பத்தில் போராடியமையினால் இந்த நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிகழ்வினை காண்பதற்கு சுமார் 16 இலட்சம் பேர் வருகை தந்திருந்தாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தற்சமயம் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீது கடுமையான கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி
விமானப் படை சாகச நிகழ்வில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசின் நிா்வாகச் சீா்கேடே காரணம் என்று எதிா்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக்கூட முறையாக ஒருங்கிணைக்கத் திமுக அரசு தவறியுள்ளது. இதற்கு நிா்வாகச் சீா்கேடே காரணம் என்று அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நிர்வாகத்தின் மீது அவர் நேரடியாக பழியை சுமத்தி கண்டனம் வெளியிட்டிருந்தார்.
அண்ணாமலை
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் சம்பவத்தில் அரசு அலட்சியமாக செயற்பட்டதாக குற்றம் சாட்டியதுடன், சரியான வசதிகள் இருந்திருந்தால், இறப்புகள் மற்றும் காயங்களை தடுத்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், முதல்வர் ஸ்டாலினை குறிவைத்து பேசிய அண்ணாமலை, இந்த சம்பவம் தி.மு.க. நிர்வாகத்தின் முழுமையான தோல்வி என்றும் குற்றம் சாட்டினார்.
ஷெசாத் பூனவல்லா
சென்னை விமான கண்காட்சியில் 5 பேர் உயிரிழந்தது மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது சோகம் அல்ல, இது ஒரு அரசு நடத்திய கொலை மற்றும் பேரழிவுக்கு திமுக அரசும், முதல்வரும் (மு.க.ஸ்டாலினும்) நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும்.
மேலும் அரசின் வம்சம் மற்றும் ஊழலை உயர்த்துவதே இந்த சம்பவத்திற்கு காரணம்.
எனவே, இதற்கு திமுக அரசு பொறுப்பு கூற வேண்டும் என்பதுடன், முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
கனிமொழி
சென்னையில் நடைபெற்ற விமானப்படை விமான கண்காட்சியில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக 5 பேர் உயிரிழந்தது வருத்தமும் வேதனையும் அளிப்பதாக திமுக எம்.பி கனிமொழி திங்கள்கிழமை கூறியதுடன், கட்டுப்பாடற்ற கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது வருத்தம் தான். ஆனால் அதை யாரும் அரசியல் செய்ய நினைக்க கூடாது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய நினைத்தால் தோல்வி தான் அடைவார்கள்.
மா.சுப்பிரமணியன்
வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். விமானப்படை கேட்ட அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்தது. சாகச நிகழ்ச்சியின் நேரத்தை முடிவு செய்தது விமானப்படை தான். கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.