”வெலிமடை மக்களுக்கு ஐக்கிய ஜனநாயகக் குரல் பக்க பலமாக இருக்கும்” என எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் ஒலிவாங்கி சின்னத்தில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
வெலிமடை பெரிய காந்தியம்மன் ஆலய முன்றலில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பிரச்சார நடவடிக்கையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எமது உடன் பிறப்புக்கள் அனைவரும் ஒன்றினைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெலிமடை தொகுதிக்கு எமது பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை களமிறக்கத் தீர்மானித்துள்ளோம்.
வெலிமடை மக்கள் எப்போதும் தோட்டத் தொழிலாளர்களாகவோ, அடிமைகளாகவோ இருக்க முடியாது.
எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாக நாடாளுமன்றம், மாகாண சபை, பிரதேச சபைகளிலே எங்களுடைய வெலிமடைத் தொகுதியில் இருந்து தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய பிரதிநிதிகள் செல்லவேண்டிய காலத்தின் கட்டாயம் உள்ளது.
தற்போதைய காலத்தில் தோட்டத்தில் வசிக்கும் பிள்ளைகள் நல்ல கல்வி அறிவுடையவர்களாகத் திகழ்கின்றனர்.
சிறந்த பெறுபேறுகளை பெறுகின்றனர். அவர்களும் அவர்களது மக்களது பிரச்சினைகளை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் சென்று ஒலிக்க வேண்டும். அதற்கு ஐக்கிய ஜனநாயகக் குரல் பக்க பலமாக இருக்கும் . எமது வாக்கை நாங்கள் பங்கு போட விரும்பவில்லை” இவ்வாறு வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபல நடிகர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி சார்பாக நாட்டின் பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.