கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுப்பதற்காக வழங்கப்படும் HPV தடுப்பூசிக்குப் பின் ஏற்படும் சிறு பக்க விளைவுகள் குறுகிய காலத்துக்குரியவை எனவும், பாடசாலை மாணவிகள் அது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
களுத்துறையில் உள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் 5 மாணவிகளுக்குக் குறித்த தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் வயிற்று வலி, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு, அவை குறுகிய கால அறிகுறிகள் எனத் தெரிவித்துள்ளது.
குறித்த மாணவர்களுக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை வழங்கியதன் பின்னர், அவர்கள் குணமடைந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளும் போது ஏற்படும் அச்சம் காரணமாகச் சிறுவர்களுக்கு சிறு மயக்க நிலை போன்ற குறுகிய காலப் பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.