விமல் வீரவன்ச அறிவித்திருக்கிறார்,தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது என்று.ஏனென்றால்,நாடாளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெறக்கூடிய பெரும்பான்மையை பாதிக்கும் விதத்தில் அதற்கு எதிராக போட்டியிட்டு வாக்குகளைச் சிதறடிக்க அவர் விரும்பவில்லையாம். அவர் ஜேவிபியில் இருந்தவர். அதன் தீவிர இனவாத முகம். தனது தோழர்களின் வெற்றிக்காக வழிவிடும் அவருடைய மேற்படி அறிவிப்புக் குறித்து அரசியல் வட்டாரங்களில் வேறு ஒரு விளக்கம் உண்டு.அவனுடைய மனைவி ஒரு வழக்கில் மாட்டுப்பட்டு இருக்கிறார்.அந்த விவகாரத்தை மீண்டும் ஜேவிபியின் அரசாங்கம் கிளறி எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அதனால்தான் ஜேவிபியை சந்தோஷப்படுத்த விமல் அவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது ஒரு விளக்கம்.
எனினும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பகுதியினர் விமல் வீரவன்சவின் அறிவிப்பை ஆர்வத்தோடு பார்க்கின்றார்கள். சிங்கள மக்கள் மத்தியில் உள்ள கட்சிகள் எப்படியெல்லாம் ஐக்கியப்படலாம் என்று அவர்கள் வியப்போடு பார்க்கிறார்கள்.ஆனால் தமிழ் கட்சிகளின் நிலை இம்முறை எவ்வாறு காணப்படுகிறது என்றும் அவர்கள் ஒப்பிட்டுக் கவலைப்படுகிறார்கள்.
இம்முறை,யாழ்ப்பாணத்தில் ஆறு ஆசனங்களுக்கு 396 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.வன்னியில் ஆறு ஆசனங்களுக்கு 459 வேட்பாளர்கள். மட்டக்களப்பில் ஐந்து ஆசனங்களுக்கு 392 வேட்பாளர்கள். திருகோணமலையில் நான்கு ஆசனங்களுக்கு 217 வேட்பாளர்கள். அம்பாறையில் ஏழு ஆசனங்களுக்கு 640 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
இது வடக்கு கிழக்கில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் தொக குறித்த ஒரு புள்ளிவிபரம். இந்தப் புள்ளிவிபரம் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது.தமிழ் மக்கள் ஒற்றுமை இல்லாதவர்கள், தங்களுக்குள் அடிபடுகிறார்கள், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகளும் சுயேட்சைகளும் தமிழ் வாக்குகளை சிதறடிக்கப் போகின்றன… என்றெல்லாம் எழுதப்படுகின்றது.
உண்மை. தமிழ் வாக்குகள் நாடாளுமன்றத் தேர்தலில் சிதறடிக்கப்பட போவது உண்மை. ஆனால் அது இந்த முறை மட்டும் நிகழவில்லை. கடந்த 15 ஆண்டுகளிலும் நடந்த பெரும்பாலான நாடாளுமன்ற தேர்தல்களில் இந்த நிலைமை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் கூட்டமைப்பு உடைந்துடைந்து தமிழரசுக் கட்சியாகிவிட்டது. தமிழரசுக் கட்சிக்குள் இருந்து வெளியேறிய பங்காளி கட்சிகள் தங்களுக்கு இடையே குத்துவிளக்கு கூட்டணி ஒன்றை உருவாக்கின.அது ஒரு பலமான கூட்டணி என்ற நம்பிக்கை இனிமேல்தான் ஏற்பட வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் உடைவு ஏற்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குள் உடைவு ஏற்பட்டிருக்கிறது. இந்த உடைவுகளின் விளைவாகவும் அதிகரித்த தொகை கட்சிகளும் சுயேச்சைகளும் அரங்கில் காணப்படுகின்றன.
ஒரு சிறிய அரசற்ற மக்கள் கூட்டத்தின் மத்தியில் இவ்வளவு தொகை கட்சிகளும் சுயேச்சைகளும் காணப்படுவது என்பது தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவைக் காட்டுகின்றது.இந்த சீரழிவில் இருந்து தமிழ் அரசியலை மீட்பதற்காகத்தான் ஒரு பொது வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டார். ஆனால் பொது வேட்பாளரை நிறுத்திய பொதுக் கட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலோடு செயலிழந்து விட்டது. அது நாடாளுமன்ற தேர்தலில் செயற்படவில்லை.
அது போன்ற ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று பரவலான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும் அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் உண்டு. அந்த எதிர்பார்ப்பை மேலும் சரியான வார்த்தைகளில் சொன்னால் தமிழ் தேசிய அரங்கில் காணப்படும் எல்லாத் தரப்புகளையும் ஆகக்கூடிய பட்ஷம் ஓரணியாகத் திரட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. அவ்வாறு திரட்டுவதற்கான முயற்சிகள் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிவில் சமூகங்கள், மக்கள் அமைப்புக்கள், மதத்தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் போன்ற பல தரப்புக்களும் அந்த முயற்சியில் ஈடுபட்டு தற்காலிக வெற்றிகளை பெற்றிருக்கிறார்கள். அவை நிரந்தர வெற்றிகளாக அமையவில்லை.
ஒரு பொது வேட்பாளர் நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய பொதுக்கூட்டமைப்பும் இப்பொழுது செயலிழந்து விட்டது.பொதுக்கட்டமைப்பு எனப்படுவது மக்கள் அமைப்பும் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.அது கடந்த நான்கு தசாப்த காலத்தில் உருவாக்கப்பட்ட ஆகப்பிந்திய,சாத்தியமான ஒற்றுமைக்கான ஒரு இடையூடாட்டத் தளம் ஆகும். அதை நிரந்தரமாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு கட்சிகளிடமும் இருந்தது தமிழ் மக்கள் பொதுச்சபையிடமும் இருந்தது. ஆனால் அது சாத்தியமாகவில்லை.
தமிழ் மக்கள் பொதுச்சபை தேர்தலில் பங்குபற்றாமல் விட்டதால் அது செயலிழந்தது என்று கூற முடியாது.சங்குச் சின்னத்தை குத்துவிளக்குக் கூட்டணி வசப்படுத்தியது அதற்கு ஒரு முக்கிய காரணம். ஐக்கியத்திற்கான எழுதப்பட்ட ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை கட்சிகள் தமக்கு வசதியாக வியாக்கியானம் செய்த பொழுது, தமிழ் மக்கள் பொதுச்சபையானது கட்சிகளிடமிருந்து விலகத் தொடங்கியது. பொதுக் கட்டமைப்பாக தேர்தலை எதிர்கொண்டால், தாங்களும் இணைந்து செயல்படுவோம் என்று பசுமை இயக்க கட்சியும் மான் கட்சியும் ஏற்கனவே தெரிவித்திருந்தன.தமிழ் மக்கள் பொதுச்சபை தேர்தலில் நேரடியாக பங்கேற்கவிட்டாலும் ஐக்கியத்திற்கான அந்த கட்டமைப்பை தொடர்ந்து பாதுகாப்பதற்கு அந்த மக்கள் அமைப்பு தயாராக இருந்திருந்தால், பசுமை இயக்கமும் மான் கட்சியும் தொடர்ந்து அந்த கட்டமைப்புக்குள் ஒன்றாக இருந்து தேர்தலை எதிர்கொண்டு இருந்திருக்கும். ஆனால் சங்குச் சின்னம் விவகாரமாகிய பின் ஐக்கியத்துக்கான தார்மீகத் தளம் ஆட்டம் கண்டது. அதன் விளைவாக பொதுக் கட்டமைப்பு செயலிழந்தது.
தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டிருந்தால் இப்பொழுது அரங்கில் காணப்படும் ஆகக்குறைந்தது மூன்று சுயேட்சைகள் அந்தக் கட்டமைப்புக்குள் நின்று போட்டியிட்டிருந்திருக்கும்.எனைய சுயேச்சைகளையும் தமிழ் மக்கள் பொதுச்சபை அந்தக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்திருக்கும். அந்தக் கூட்டு ஒப்பீட்டளவில் பெரியதாகவும் எனைய இரண்டு கட்சிகளுக்கும் சவால்கள் மிகுந்ததாகவும் அமைந்திருக்கும்.
சில மாதங்களுக்கு முன்பு தமிழ்ப் பொது வேட்பாளருக்காக மக்கள் அமைப்பு கட்சிகளை சந்தித்தது. அப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த ஒரு பிரமுகர் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளிடம் பின்வருமாறு சொன்னார் “இந்த முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றால் இப்பொழுது எங்களிடம் இருக்கும் இரண்டு ஆசனங்களையும் நாங்கள் இழந்து விடுவோம் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று.
பொதுக் கட்டமைப்பை பகைநிலையில் வைத்து பார்த்து கூறப்பட்ட வாக்கியம் அது. ஆனால் பொதுக் கட்டமைப்பு எல்லா கட்சிகளுக்குமான திறந்த, நெகிழ்ச்சியான ஒரு கட்டமைப்பாகக் காணப்பட்டது. அதனை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்றிருந்தால் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் வாக்குகள் சிதறுவதை தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும்.
உதாரணமாக, திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பொதுச்சபையின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிய மறை மாவட்ட ஆயர் தலைமையில் கட்சிகளுக்கு இடையே பகை தவிர்ப்பு உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அது ஒரு வித்தியாசமான கூட்டு. அங்கே சங்கும் வீடும் ஒன்றாக நிற்கின்றன. ஆனால் வீட்டுச் சின்னத்தின் கீழ் நிற்கின்றன.
அது போன்ற ஒரு முயற்சி அம்பாறையிலும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. அதற்கு தமிழரசுக் கட்சிதான் காரணம் என்று ஒரு கருத்து உண்டு.அங்கு தமிழரசுக் கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் குறையுமாக இருந்தால் தேசியப் பட்டியல் மூலம் அந்த மாவட்டத்திற்குரிய பிரதிநிதித்துவம் தரப்படும் என்று எதிர்பார்ப்பு உண்டு. அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் பொழுது சங்கோடு கூட்டை வைத்துக் கொள்வது வசதியாக இருக்காது என்று தமிழரசுக் கட்சி கருதியதாகத் தெரிகிறது. அதனால் அம்பாறை மாவட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தைப் போல ஒரு பகை தவிர்ப்பு உடன்படிக்கையைச் செய்ய முடியவில்லை.
எனினும்,திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் முன்னுதாரணம் எதை உணர்த்துகிறது என்றால், மக்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் சிவில் சமூகங்களும் இணைந்து கட்சிகளை ஏதோ ஓர் ஒருங்கிணைப்புக்குள் கொண்டு வரலாம் என்பதைத்தான்.
ஜனாதிபதித் தேர்தலில் பலமாகக் காணப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு அதை இலகுவாக செய்திருந்திருக்க முடியும். ஆனால் அந்த ஐக்கியத்தை விடவும் பொதுச் சின்னத்தை வசப்படுத்துவதன் மூலம் வெற்றி வாய்ப்புகளை உறுதிப்படுத்தலாம் என்று ஒரு தொகுதி கட்சிகள் சிந்தித்ததன் விளைவாக தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு ஒரு கட்டத்துக்கு மேல் செயல்பட முடியாது போய்விட்டது.அதனால் தமிழ்க் கட்சிகள் தனித்தனியாகக் களம் இறங்கின. ஒருங்கிணைக்க அமைப்பு இல்லாத ஒரு பின்னணியில், சுயேச்சைகளும் களம் இறங்கின.இது தமிழ் வாக்குகளை எந்தளவுக்குச் சிதறடிக்க போகின்றது?