”வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்பது யார் என்பதை எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்களே தீர்மானிக்க வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ரத்மலானையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ இந்த நாடு வங்குரோத்து நிலையிலும் கடனில் இருந்து மீளமுடியாத நிலையிலும் உள்ளது. அதிலிருந்து நாட்டை யார் மீட்டெடுப்பது என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.
அத்துடன் வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்ககூடிய திறன் ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ளது. சிறந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் எமது கட்சியிலேயே அங்கம் வகிக்கின்றனர்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்ற கடனை இன்னும் 4 வருடங்களில் நாம் செலுத்த வேண்டும் எனவும், அந்த இலக்கினை நாம் அடையாவிட்டால் நாம் மீண்டும் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும்” இவ்வாறு சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.