அறுகம்பை வளைகுடா பகுதியில் சாத்தியமான தாக்குதல் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அண்மைய பயண எச்சரிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை ஐக்கிய இராச்சியம் புதுப்பித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இலங்கையில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு, அறுகம்பை வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவலை மேற்கோள் காட்டி, மறு அறிவித்தல் வரும் வரை அறுகம் வளைகுடா பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, அறுகம்பை பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு விசேட நடவடிக்கைகளை இலங்கை பொலிஸார் எடுத்துள்ளனர்.
அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புலனாய்வு அமைப்புகளும் ஏனைய பாதுகாப்புப் படையினரும் பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அறுகம்பை வளைகுடா மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் சர்ஃபிங் செய்யும் பிரபலமான இடங்கள் காரணமாக இஸ்ரேலியர்கள் அடிக்கடி அங்கு செல்வதாகவும், அண்மைக்காலமாக கிடைத்த தகவல்கள் அவர்களை இலக்கு வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெளிவுபடுத்தினார்.
கொழும்பில் அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இதுவரையில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் புலனாய்வு அறிக்கைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
எனவே பொதுமக்கள் எத்தகைய அச்சமும் கொள்ள வேண்டாம் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.