முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் .
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்திருந்தார்.
சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கத் தயார் என நேற்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
இதேவேளை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது