2018 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் டேவிட் வோர்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தலைமை தடை நீக்கப்பட்டதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா (CA) வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவுடன் கேப்டவுனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வோர்னர் அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து 12 மாதங்களுக்கு தடை செய்யப்பட்டார்.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டது.
அதன்படி, மூன்று வீரர்களும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அவரது 12 மாத தடைக்கு மேல், வோர்னர் வாழ்நாள் முழுவதும் தலைமைத் தடையால் பாதிக்கப்பட்டார்.
சம்பவத்தில் வோர்னர் தனது செயற்பாட்டை ஒருபோதும் பகிரங்கமாக விவரிக்கவில்லை.
எனினும் அவர் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவுடனான தனது உறவை சரிசெய்து தனது தலைமை தடையை நீக்க முயன்றார்.
இந்த நிலையில், ஒக்டோபர் 25 அன்று கூடிய கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழு, தடையை நீக்குவதற்குத் தேவையான அனைத்து நிபந்தனைகளையும் வோர்னர் பூர்த்தி செய்துள்ளார் என்று தீர்மானித்தது.
அதன்படி, வோர்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தலைமை தடை உடன் அமுலாகும் வகையில் நீக்கப்படுவதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பின் மூலம் பிக் பாஷ் லீக்கில் (BBL) சிட்னி தண்டரை வழிநடத்த வோர்னர் இப்போது தகுதி பெற்றுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்குப் பின்னர் கடந்த ஜனவரி மாதம் வோர்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்குப் பின்னர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வோர்னர், கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.