நான் நாடாளுமன்றம் செல்வதற்கு பிரதான எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஏன் அஞ்சுகின்றனர்? என ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளனர்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நேற்று எனது வேட்புமனுவை நிராகரிக்குமாறுக் கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை நான் ஊடகங்கள் வாயிலாகத்தான் தெரிந்துக் கொண்டேன். 28,29,30 களில் இதுதொடர்பாக திகதியொன்று அறிவிக்கப்படும் என்று நம்புகிறேன்.
உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக ஆராந்து, எனக்கு சார்பான கட்டளையை பிறப்பிக்கும் என்று நம்புகிறேன். நான் தேர்தலில் களமிறங்க தகுதியான வேட்பாளர் என்று தேர்தல்கள் ஆணைக்குழவின் தலைவரும், ஆணையாளரும் தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு நான் கேட்டபோது தெரிவித்திருந்தனர்.
எனவே, எனக்கு தெரிந்தவகையில் எனக்கு இந்நாட்டின் சிவில் பிரஜையொருவரின் உரிமை உள்ளது என்றே நினைக்கிறேன். கொச்சிக்கடையில் அமைந்துள்ள எனது மைத்துனரின் வீட்டுக்கும் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை வந்திருந்தது.
எனினும், கொரியாவில் இசை நிகழ்ச்சியொன்றில் இருந்தமையால் வாக்களிக்க முடியாமல் போனது. நான் சிறைச்சாலையில் ஒரு வருடமும் 8 மாதங்களும் இருந்தேன்.
நாடாளுமன்றில் கூறிய கதையொன்றை வெளியே கதைத்த காரணத்தினால்தான் சிறைக்குச் சென்றேன்.
மாறாக கொலை செய்தோ, திருடியோ, பெண்ணை துஷ்பிரயோகம் செய்தோ, போதைப்பொருடட் விற்றோ, கப்பம் பெற்றோ சிறைக்குச் செல்லவில்லை.
இப்படியான நான் கள அரசியலில் இறங்க யாரும் எதிர்ப்பினைத் தெரிவிக்க மாட்டார்கள்.
மாறாக என்னை காலால் இழுப்பது இன்னொரு அரசியல் கட்சி என்பதை நான் கூறிக்கொள்கிறேன். இவர்களுக்கு உயர்நீதிமன்றம் பதில் வழங்கும். எனக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தவர்களின் பின்னணியில் செல்வந்தமான பல அரசியல் கட்சிகள் உள்ளன என்று தெரியவந்துள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றுக்கு வருவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நான் சட்டத்தரணிகளின் ஆலோசனைகளுக்கு இணங்கவே வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தேன். இது எனது உரிமை. இதற்கு எதிராக மனுத்தாக்கல் செய்தமை அவர்களின் உரிமை. உயர்நீதிமன்றம்தான் தீர்ப்பினை வழங்க வேண்டும்.
நான் நேர்மையானவன் என்பதால்தான் 3 தடவைகள் மக்கள் என்னை தெரிவு செய்தார்கள். இம்முறையும் அது நடக்கும் என்றே நான் நம்புகிறேன். நான் சட்டத்தரணிகளின் அனுமதியைப் பெற்றே இம்முறையும் களமிறங்கியுள்ளேன்.
எனக்கு சிவில் உரிமை உள்ளமையால் அஞ்சத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
எனது குரலை நாடாளுமன்றிலிருந்து முற்றாக இல்லாது செய்ய வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கமாக உள்ளது.
இல்லாவிட்டால் எனக்கு எதிராக ஏன் இத்தனை வழக்குகளை போட வேண்டும். நான் வேட்புமனு தாக்கல் செய்தபோதும் வழக்குத் தொடர்ந்தார்கள். தற்போது எனக்கு விரும்பு எண்ணும் கிடைத்துவிட்டது.
ஆனாலும், என்னை தடுக்க இவர்கள் முயற்சி செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நான் நாடாளுமன்றுக்கு வருவதால் இவர்கள் ஏன் இவ்வளவு அச்சப்படுகிறார்கள்? பிரதானக் கட்சிகள் என்னை நிறுத்த ஏன் இவ்வளவு முயற்சிகள் எடுக்க வேண்டும்?
என்னிடம் உங்களின் குரல் பதிவுகள் உள்ளமை உண்மைதான். நான் நாடாளுமன்றுக்கு வந்து நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க இதுதொடர்பாக கதைப்பேன்.
இந்த அச்சத்தினால்தான் இவர்கள் இன்று குழப்பமடைந்துள்ளார்கள். இதனால், என்னை, எமது கட்சியின் சின்னத்தைக்கூட அவர்கள் தடை செய்யத்தான் பார்க்கிறார்கள்.
இது தொடர்பாக அதிகாரிகள் நேர்மையாக பார்க்க வேண்டும்.
நான் எனது அரசியல் வாழ்க்கையில், பெண்களை துஷ்பிரயோகம் செய்யவோ திருடவோ கப்பம் பெறவோ, பார் அல்லது எரிபொருள் நிலையத்திற்கான உரிமைப் பத்திரங்களை வைத்தோ இல்லை.
எனது சம்பளத்தைக்கூட மக்களுக்காக பகிர்ந்தவன் தான் நான். இப்படியான நான் நாடாளுமன்றம் வருவதற்கு இவர்கள் ஏன் அஞ்ச வேண்டும்? மக்கள் இதுதொடர்பாக சிந்திக்க வேண்டும்.
உலகில் உள்ள அரசர்கள் ஒரு காலத்தில் நடந்துச் சென்றார்கள். பின்னர் குதிரையில் பயணித்தார்கள்.
இராவணன் போன்ற மன்னன், புஷ்பகவிமானத்தில் பயணித்தார் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், கம்பஹா, புத்தளம், மாத்தறை, நுவரெலிய, பதுளை மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களுக்கு இரண்டே நாட்களில் சென்று, கூட்டங்களை நடத்த வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டது.
நுவரெலியாவிற்கு நான் ஹெலிகப்டரில் சென்றிருந்தேன். 2300 டொலர் கட்டணம் ஒரு மணித்தியாலத்திற்கு ஹெலிகப்டரில் செல்ல அறவிடப்படும்.
ஆனால், அரை மணித்தியாலங்களில் நான் அங்கு சென்றுவிட்டேன். வீதி வழியே சென்றால் நேரம் விரயமாகும் என்பதால்தான் இப்படி சென்றிருந்தேன். எனக்கு பலரும் நிதி உதவிகளை வழங்கினார்கள்.
பல நாடுகளில் இருப்போர் எனக்கு உதவிகளை செய்கிறார்கள். எனது கொள்கைகள், எனது நோக்கங்கள் தொடர்பாக நம்பிக்கை வைத்தே, அவர்கள் உதவுகின்றார்கள்.
நான் திருடன் இல்லை என்பதாலும், விசேடமாக நான் திருமணமாகத காரணத்தினாலும் எனக்கு நிதி உதவிகளை செய்தால், குடும்பந்த்திற்கு அன்றி, மக்களுக்கு பிரித்துக் கொடுப்பேன் என்ற நம்பிக்கையில் இவர்கள் உதவி செய்கிறார்கள்.
இவர்களிடம் நான், இந்தப் பிரதேசங்களுக்கு விரைவாக செல்ல ஏற்பாடு செய்துத் தருமாறு கோரியிருந்தேன்;. அதற்கு இணங்க அவர்களும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இந்தக் காலத்தில் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டிய ஒரு அரசியல்வாதி, மக்களை சந்திக்க ஹெலிகப்டரில் செல்வது பாரிய குற்றம் இல்லை என்று நான் நினைக்கிறேன்.
அத்தோடு, நான் ஹெலிகப்டரில் சென்று போதைப்பொருட்களை கடத்தவோ வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடவோ இல்லை. மேலும், நாளை மதியம் 2 மணிக்கு எமது கட்சியின் தேசிய மாநாடு, சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு நாம் எமது அனைத்து ஆதரவாளர்களுக்கும் புதிய நண்பர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்” இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.