வவுனியா நகர பகுதியில் அண்மையில் இடம் மாற்றப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு,குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் மக்கள் கடவுச்சீட்டுகளை பெற வரிசையில் நிற்க வேண்டிய நிலை நீடித்து வருகின்றது
வெறும் 25 நபர்களுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 700 தொடக்கம் 1000 பேர் வரையில் இரவு பகலாக வரிசையில் நிற்க வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் அப்பகுதிக்கு சென்ற வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் சட்டத்தரணி டினேசன் அப்பகுதியை பார்வையிட்டதுடன் மக்களுடன் கலந்துரையாடி இருந்தார் .
இதேவேளை அரசாங்கம் அண்மையில் கடவுச்சீட்டுக்களை பெறுவதில் உள்ள தாமதங்கள் நீக்கப்படும் என அறிவித்திருந்த போதிலும் இதுவரை எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதுடன் அசுத்தமான பகுதிகளில் மக்கள் தொடர்ச்சியாக வரிசையில் நிற்கின்றார்கள்.
குறிப்பாக அப்பகுதியில் உள்ள கால்வாயில் கழிவு நீர் ஓடாமல் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றம் வீசி வருகிறது. அத்துடன் அப்பகுதியில் டெங்கு நுளம்பும் பெருகி காணப்படுகின்றது. அதே நேரம் அப்பகுதி முழுவதும் வெற்றிலை எச்சிகளும் குப்பைகளுமாக காணப்படுகின்றது.
அதே நேரம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் நாள் ஒன்றுக்கான சேவையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதுடன்,பணம் பெற்று டோக்கன் வழங்கும் நபர்களையும் தடுக்க வேண்டும் என்பதுடன் அசுத்தமாக காணப்படும் இப்பகுதிகளை சுத்தம் செய்யவும் நகரசபை முன்வர வேண்டும் என கோரிக்கையையும் சட்டத்தரணி டினேசன் முன்வைத்திருந்தார்