கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அண்மையில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நபர் குறித்த துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டவர் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதி கிரேண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் ஒருவர் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்பவத்தை அடுத்து கிரேண்ட்பாஸ் பொலிஸாரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
ஒக்டோபர் 28 ஆம் திகதி, துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் சாரதி என அடையாளம் காணப்பட்ட 35 வயதுடைய புளூமெண்டல் பகுதியில் வசிக்கும் நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் 31 வயதுடைய நபர் வத்தளை, ஹெந்தல பகுதியில் நேற்று (ஒக்.31) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 2 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேகநபர் வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரமுகருடன் தொடர்பில் இருந்ததாகவும், இந்த நபரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணையை கிரேண்ட்பாஸ் பொலிஸாரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.