சவுதி எண்ணெய் நிறுவனமான ஆரம்கோ (Aramco), 2024 இன் மூன்றாம் காலாண்டில் இலாபத்தில் 15.4% சரிவை பதிவு செய்துள்ளதாக செவ்வாயன்று (05) அறிவித்தது.
குறைந்த மசகு எண்ணெய் விலை மற்றும் பலவீனமான சுத்திகரிப்பு பணிகள் என்பவற்றினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், காலாண்டில் அதன் தாராளமான ஈவுத்தொகை 31.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக ஆக இருந்தது.
ஆரம்கோ செப்டம்பர் 30 வரையிலான வருடத்தின் மூன்று மாதங்களில் 27.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிகர வருமானத்தைப் பதிவு செய்தது.
2024 ஆம் ஆண்டில் 124.3 பில்லியன் டொலர் மொத்த ஈவுத்தொகையை அறிவிக்க எதிர்பார்ப்பதாக ஆரம்கோ கூறியுள்ளது.
ஆரம்கோவின் 81.5 சதவீதத்தை நேரடியாக வைத்திருக்கும் சவுதி அரசாங்கம் கொண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய மசகு எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, தற்போது ஒரு நாளைக்கு சுமார் ஒன்பது மில்லியன் பீப்பாய்களை (bpd) உற்பத்தி செய்து வருகிறது.
சவுதி அரேபியா மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் OPEC + குழுவின் ஏனைய ஏழு உறுப்பினர்கள் நவம்பர் 2023 இல் அறிவிக்கப்பட்ட 2.2 மில்லியன் பீப்பாய் குறைப்பை மேலும் ஒரு மாதத்திற்கு அதாவது டிசம்பர் இறுதி வரை நீட்டிப்பதாக ஞாயிறன்று (03) தெரிவித்தனர்.