அனைத்து இன மக்களையும் சமமாக மதித்து செயற்பட்டால் மாத்திரம்தான் நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்று ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்
பொதுத் தேர்தலுக்கான தீவிர பிரசாரப் பணிகளை மேற்கொண்டு வரும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் மாநாடு, ஹட்டனில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்
ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் இந்தக்கூட்டம் இடம்பெற்றிருந்தது.
மைக் சின்னத்தில் பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள இந்தக் கட்சியின் வேட்பாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டிருந்ததோடு, இவர்களுக்கு பொது மக்களினால் அமோக வரவேற்பும் அளிக்கப்பட்டது.
அத்துடன் எமது கட்சிக்கு வந்துக் கொண்டிருக்கும் எதிர்ப்பைப் போன்று வேறு எந்தவொரு கட்சிக்கும் வரவில்லை என்றும் நாம் பழைய கட்சிகளுக்கு செல்லவில்லை.
அங்குள்ள சலூன் கதவுகளின் ஊடாக கொலைக் காரர்கள், ஊழல்வாதிகள், போதைப்பொருள் கடத்தல் காரர்கள் எல்லாம் வந்துள்ளார்கள்.அந்த திருடர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பாத காரணத்தினால்தான், மோசடியாளர்கள் இல்லாத இந்த கட்சியை ஸ்தாபித்தேன்.
இதனால்தான் எமது கட்சி பல சவால்களை எதிர்க்கொண்டு வருகிறது. எனது வேட்புமனுவை இரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்கள்.தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்தார்கள். ஆனால், அனைத்து இடங்களிலும் எமக்கு வெற்றிதான் கிடைத்துள்ளது.
இதனால், எமது பாதை இன்று தெளிவாகியுள்ளது.நான் நாடாளுமன்றுக்கு சென்றால் திருடர்களுக்கு நல்ல பாடத்தை கற்பிப்பேன். நாம் நிச்சயமாக இந்தத் தேர்தலில் இரண்டாவது பெரிய கட்சியாக மாற்றமடைவோம்.
அத்துடன் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவர் கடந்த முறை ஜனாதிபதியாக இருந்தபோது, எந்தவொரு யுத்தத்திற்கும் தொடர்பில் இருக்கவில்லை.
அவர் அந்நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்துவது தொடர்பாக மட்டும்தான் செயற்பட்டிருந்தார். இதனால் அந்த நாடு எங்கும் கடன்கூட பெற்றிருக்கவில்லை.அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜோ பைடனினால் இன்று அமெரிக்கா வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும் எமது நாடும் யுத்தங்களுக்கு தொடர்புப்படக்கூடாது. அனைத்து இன மக்களையும் சமமாக மதித்து பயணித்தால் மட்டும்தான் நாட்டை முன்னேற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்