இலங்கையின் புதிய இடதுசாரி அரசாங்கம் சர்ச்சைக்குரிய சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புத் திட்டத்தை முன்னெடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச கடன் வழங்குநர்கள் அறிவித்துள்ளனர்.
புதிய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் முடிவில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) சனிக்கிழமை (23) செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த விடயத்தை தெரிவித்தார்.
கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பெறப்பட்ட நான்கு வருட கடனை தொடர்ந்தும் வழங்குவதற்கு தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்துடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் அர்ப்பணிப்பு கொள்கை தொடர்ச்சியை உறுதி செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் உள்ள கையிருப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும், வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது நிதிக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் பீட்டர் ப்ரூயர் சுட்டிக்காட்டினார்.
2022 ஏப்ரலில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரச் சரிவின் போது நாடு தனது 46 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாத வங்குரோத்து நிலையில், மீட்புப் பொதிக்காக இலங்கை சர்வதேச நாணய நியதித்தின் உதவியை நாடியது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்பட்ட 2.9 பில்லியன் டொலர் கடனானது, இலங்கையை கடுமையாக வரிகளை உயர்த்தி, தாராளமான எரிசக்தி மானியங்களை நீக்கி, 50 க்கும் மேற்பட்ட நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
அநுரகுமார திஸாநாயக்கவின் முன்னோடியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு வருடங்களில் 2.9 பில்லியன் டொலர் கடனை வழங்குவதை உள்ளடக்கிய சர்வதேச நாணய நிதியத்தின் மீட்பைப் பெற்றார்.
இந்த நிலையில் புதிதாக பதவியேற்ற ஜனதிபதி அநுரகுமார திஸாநாயக்க நவம்பர் 14 தேர்தலில் அவரது தேசிய மக்கள் சக்தி கட்சி மகத்தான வெற்றியைப் பெற்ற பின்னர் நவம்பர் 21 அன்று நடாளுமன்றத்தில் ஆற்றிய முதல் உரையில், IMF உடனான ஒப்பந்தத்துக்கு ஆதரவினை வெளிப்பத்தியிருந்தார்.