தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நேற்றிரவு (25) 11.30 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து 290 கி.மீ தொலைவிலும் திருகோணமலையில் இருந்து 410 கி.மீ தொலைவிலும் தென்கிழக்கே நிலை கொண்டிருந்தது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு மிக அருகில் நகரக்கூடும்.
இதனால், இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு தாக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை மற்றும் பலத்த காற்று எதிர்பார்க்கலாம்.
அதேநேரம், தீவின் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா, தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காற்று
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையில் வீசும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர்களாக காணப்படும்.
மேலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (60-70) கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
கடல் நிலை
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை தீவைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.