சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் நாடாளுமன்றம் இன்று (03) கூடவுள்ளது.
நாடாளுமன்றத்தை டிசம்பர் 03 ஆம் திகதி (இன்று) முதல் 06 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் கடந்த நவம்பர் 25 ஆம் திகதி கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய இன்று (03) கூடும் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியினால் அண்மையில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரடகனம் குறித்த பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டு, காலை 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை விவாதிக்கப்படவுள்ளது.
நாளையும் குறித்த பிரேரணை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அன்றையதினம் மாலை 5.00 மணிக்கு வாக்கெடுப்பை நடத்துவதற்கும் கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
டிசம்பர் 05 ஆம் திகதி வியாழக்கிழமை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்புக் குறித்த தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய டிசம்பர் 05 ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடத்தப்படவுள்ளது.
இது பற்றிய விவாதத்தை 06 ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரையும் முன்னெடுக்கவும் இணக்கம் காணப்பட்டது.
மேலும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கான விவாதிக்கும் நேரத்தை ஒதுக்குவது, குழுக்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அமைப்பை நிர்ணயித்தல், தெரிவுக்குழுவை அமைப்பது மற்றும் இதற்கான பெயர்களை முன்மொழிவது, நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் ஏனைய குழுக்களை நியமிப்பது, துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் செயற்பாடுகள், பத்தாவது நாடாமன்றத்திற்கான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தை நியமிப்பதற்கான கோரிக்கையை ஆராய்தல் போன்ற விடயங்கள் குறித்த இங்கு கலந்துரையாடப்பட்டது.