ஐக்கிய இராஜ்ஜியத்தின் இந்தியப் பெருங்கடல் பிரதேசமான டியாகோ கார்சியாவில் (Diego Garcia) கடந்த மூன்று வருடங்களாக தங்கியிருந்த இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோர் குழு இங்கிலாந்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.
பிபிசி செய்திச் சேவையின் தகவல்களுக்கு அமைவாக, இங்கிலாந்து வெளிவிவகார அலுவலகத்தின் நிதியுதவியுடன், இலங்கைத் தமிழர்கள் ஆறு மாதங்கள் நாட்டில் தங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் தஞ்சமானது நீண்டகாலமாக அவர்கள் எதிர்நோக்கிய துன்புறுத்தல்கள், சிரமங்கள் மற்றும் சிக்கலான சட்டப் போராட்டங்களின் முடிவைக் குறிக்கிறது.
எனினும், அவர்களின் நீண்ட கால எதிர்காலம் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.
சுமார் 60 புலம்பெயர்ந்தோர் குழுவில் பெரும்பாலானோர் டியாகோ கார்சியாவில் உள்ள ஒரு தற்காலிக முகாமில் வசித்து வருகின்றனர்.
இது ஒரு மூலோபாய ஐக்கிய இராஜ்ஜியம்-அமெரிக்க இராணுவ தளம் ஆகும்.
அவர்கள் 2021 ஒக்டோபர் முதல் புகலிடக் கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.
இந்த நிலையில், பல வருட சட்ட மற்றும் மனிதாபிமான அழுத்தங்களுக்குப் பிறகு பிரித்தானிய அரசாங்கத்தின் மேற்படி சலுகை அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், குற்றவியல் தண்டனைகள், நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் அல்லது விசாரணைகள் இல்லாத அனைத்து குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் துணையில்லாத ஆண்களின் குடும்பங்கள் நேரடியாக பிரித்தானியாவுக்கு மாற்றப்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இங்கிலாந்து அரசாங்க செய்தித் தொடர்பாளர், இந்த நடவடிக்கையை இந்த வழக்குகளின் விதிவிலக்கான தன்மை மற்றும் புலம்பெயர்ந்தோரின் நலன் கருதி எடுக்கப்பட்டது என்று விவரித்தார்.
அதேநேரம், புலம்பெயர்ந்தவர்களில் சிலரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இங்கிலாந்து சட்ட நிறுவனமான லீ டேயின் டெஸ்ஸா கிரிகோரி, இது தீவில் மனிதாபிமான நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே விவேகமான தீர்வு என்று கூறினார்.
உள்நாட்டு மோதல்கள் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய 16 சிறுவர்கள்/குழந்தைகள் உட்பட 64 இலங்கை தமிழர்கள் கொண்ட குழு, ஏனைய நாடுகளுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் 2021 ஒக்டோபர் மாதம் முதல் தொலைதூர தீவில் சிக்கித் தவித்துள்ளது.
இவர்கள் அங்கு, எலி தொல்லைகளுடன் கூடிய நெரிசலான கூடாரங்களில் வாழ்வது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றை எதிர்கொள்வது, மன உளைச்சல் மற்றும் தற்கொலை முயற்சிகள் போன்ற பல்வேறு துயரங்களுக்கும் முகங்கொடுத்து வந்தனர்.
அதன் பிறகு அவர்களில் சிலர் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில், ருவாண்டாவில் உள்ளவர்களும் செவ்வாய்கிழமை (03) இங்கிலாந்துக்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும் பிபிசி கூறியுள்ளது.
எனினும்,குற்றவியல் தண்டனை பெற்ற இருவரும் மற்றும் விசாரணையில் உள்ள ஒருவருக்கும் இங்கிலாந்துக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்திற்கு இலங்கை தமிழர்களின் வருகை டியாகோ கார்சியாவின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் வந்துள்ளது.
டியாகோ கார்சியாவின் ஒரு பகுதியாக இருக்கும் சாகோஸ் தீவுகளின் கட்டுப்பாட்டை மொரிஷியஸுக்கு விட்டுக் கொடுப்பதாக இங்கிலாந்து கடந்த ஒக்டோபரில் அறிவித்தது.
ஆனால் புதிய மொரிஷியஸ் பிரதமர் தனது முன்னோடியால் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் தொடர்பில் மீள்பரிசீலனை கோரியுள்ளார்.
மொரிஷியஸுடனான இறையாண்மை ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைக்கு வந்ததும், எதிர்காலத்தில் குடியேறுபவர்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இங்கிலாந்து செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் இங்கிலாந்தில் உள்ள சில அரசியல்வாதிகள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் சகாக்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பை எதிர்கொள்கிறது.
அண்மைய ஆண்டுகளில், இப் பகுதியில் ஐக்கிய இராஜ்ஜியம் பல மில்லியன் பவுண்டுகளை செலவழித்து வருகிறது. இதில் பெரும்பகுதி புலம்பெயர்ந்தோருக்காக ஒதுக்கப்பட்டது.
புலம்பெயர்ந்தோர் தொடர்ந்தும் தீவில் இருப்பார்களாயின் ஐக்கிய இராஜ்ஜியம் ஆண்டுக்கு 50 மில்லியன் பவுண்டுகள் வரை செலவழிக்க நேரிடும் என்று ஜூலை மாதம் வெளிவிவகார அலுவலக அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை மேற்கொள்ளிட்டு பிபிசி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், இங்கிலாந்தின் உள்துறை அலுவலகத்திலிருந்து இலங்கை தமிழர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (29) அனுப்பப்பட்ட கடிதங்களில், குடியேற்ற விதிகளுக்குப் புறம்பாக பிரிட்டனுக்கு தற்காலிக நுழைவு அனுமதி வழங்கப்படுவதாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்த சலுகையானது “இங்கிலாந்தில் நிரந்தர குடியேற்றம் அல்லது இங்கிலாந்து அரசாங்கத்தால் அகதி அந்தஸ்தை அங்கீகரித்தல்” என்று பொருள்படாது.
மேலும், குழுவினர் அங்கு வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.
குறித்த குழுவில் மொத்தமாக எட்டு பேருக்கு சர்வதேச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, அதாவது அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியாது என்று பிபிசி கூறுகிறது.
ஐக்கிய இராஜ்ஜியத்தின் இந்தியப் பெருங்கடல் பிரதேசம் என்று அழைக்கப்படும் சாகோஸ் தீவுகள் இங்கிலாந்தில் இருந்து அரசியலமைப்பு ரீதியாக வேறுபட்டவை என்று அந் நாட்டு அரசாங்கம் கூறுகின்றது.
இது நீண்ட கால சட்ட முரண்பாடுகளுக்கும் வழிவகுக்கிறது.