வடக்கில் ஒரு சட்டம், தெற்கில் ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி
ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”இனவாதத்துக்கு நாம் எப்போதும் எதிரானவர்கள். அதேபோன்று உயிரிழந்தவர்களுக்கு
நினைவுக்கூர்தல்களை நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம்.
சிவாஜிலிங்கம் போன்றோர் வடக்கில் பயங்கரவாதிகளை நினைவுக்கூர்ந்தனர். ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், வடக்கில் கைதுகளை செய்வதற்கு குற்றவியல் சட்டத்தையும் தெற்கில் உள்ளவர்களை கைதுசெய்ய
பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் பயன்படுத்தியுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை தயாசிறி ஜெயசேகரவின் கருத்துக்கு பதிலளித்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்
ஆனந்த விஜேபால” வடக்கில் ஒரு சட்டமும் தெற்கில் ஒரு சட்டமும் பயன்படுத்தப்படுவதாக
தயாசிறி ஜயசேகர பொய்யாக குற்றம் சுமத்துகின்றார்.
இதுதொடர்பில் நான் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடினேன். அவ்வாறு இரண்டு சட்டங்களின் பிரகாரம் கைது செய்யப்படவில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தான் அந்த இரண்டு பகுதிகளிலும் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
அதனால் தயாசிறி ஜயசேகர மீண்டும் இனவாதத்தை பரப்பும் கருத்தைதான் வெளியிட்டுள்ளார். அவர்களது அரசியல் தோல்வியை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தவே இவ்வாறான உண்மைக்கு புறம்பான கருத்துகளை சபையில் வெளியிடுகிறார்.
சமீபத்தில் மாவீரர்கள் நாள் தொடர்பில் பல கருத்துக்கள் வெளியாகியிருந்தன. அனைவருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு உரிமையுண்டு என்பதே எங்கள் நிலைப்பாடு. தற்போதும் இதுவே எங்கள் நிலைப்பாடு.
வடக்கிற்கும் தெற்கிற்கும் இந்த நிலைப்பாடு பொருந்தும். எனினும் விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளதால் நினைவுகூர்தலின் போது அவர்களின் கொடிகள் இலச்சினைகளை பயன்படுத்த அனுமதியில்லை” இவ்வாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்
ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.