ஐரோப்பிய விண்வெளி முவர் நிலையத்தின் (ESA) இரு செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் வியாழக்கிழமை (05) வெற்றிகரமாக விண் நோக்கி ஏவப்பட்டது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி59 மற்றும் ப்ரோபா-3 என்ற செயற்கைக்கோள்களுடன் ரொக்கெட் இன்று மாலை 4:04 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் – நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் இடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் பின்னர் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கொரோனாவை பற்றிய துல்லிய ஆய்வுக்காக இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
இதற்காக ஏவப்படும் இரண்டு செயற்கைக் கோள்களின் மூலம், ஓர் ஆண்டில் 50 முறை செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்கி, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அத்தகைய ஆய்வுகள் ஒவ்வொன்றும் ஆறு மணிநேரத்திற்கு நீடிக்கும்.
இதன்மூலம், நெருங்கவே முடியாத, அவ்வளவு எளிதில் ஆராய முடியாத சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா என்ற படலத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.