நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ நாட்டில் மீண்டும் மின் மாபியா தலை தூக்கியுள்ளது. தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து தந்திரமாக மின்சாரம் கொள்வனவு செய்யப்படுகின்றது. நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் கூட அதிகபட்ச கொள்ளளவில் இயங்கவில்லை.
மின்சாரத்துறையில் நீண்ட நாட்களால் ஊழல் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இதனால் மின் மாபியா மீண்டும் தலை தூக்கியுள்ளது. மின்கட்டண உயர்வுக்கு இந்த மின்சார மாபியா பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.
நீர், மின்சாரம் மற்றும் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திறன் தற்போது உள்ளது. இனால் தனியாரிடம் மின்சாரம் வாங்கப்படுகின்றது.
இதன்காரணமாக அரச நிதி வீண்விரமாகின்றது. தற்போது மழையுடனான காலநிலை காரணமாக
நீர் மின் நிலையங்களில் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். அவ்வாறு இல்லாமல் தற்போது,
மின்சார சபை அதிகாரிகள் தனியாரிடம் கொள்வனவு செய்தால் அடுத்த வருடம் பெப்ரவரி,
மார்ச் மாதங்களில் வறண்ட காலநிலை ஏற்படும்.
இந்த காலப்பகுதியில் மின்சாரத்தை கொள்வனவு செய்ய மின்சார சபையிடம் பணம் இருக்காது.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டில் மீண்டும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க நேரிடலாம்” இவ்வாறு நந்தன உதயகுமார தெரிவித்துள்ளார்.